அர்ப்பணிப்பு சேவைக்கு கௌரவம் உலக மகளிர் தினத்தில்
சென்னை செவிலியர் ச. ஜெயலட்சுமிக்கு விருது
சென்னை:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில், சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் செவிலியர் ச. ஜெயலட்சுமி அவர்களின் சிறப்பான பணிகள் பாராட்டப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பல ஆண்டுகளாக மனிதநேய உணர்வுடன் பொதுமக்களின் ஆரோக்கிய நலனில் அயராது சேவை செய்து வரும் அவரது அர்ப்பணிப்பு பணிகளை பாராட்டி, நிகழ்வில் கலந்து கொண்ட சமூக அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மறைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், நர்சிங் மாணவர்களிடம் உரையாற்றும்போது கூறியதாவது:
“நான் மருத்துவர்களைப் பார்க்கும்போது வலி நீக்கிகளைப் பார்க்கிறேன். பல் மருத்துவர்களைப் பார்க்கும்போது மனிதர்களின் முகத்தில் புன்னகையை உருவாக்குபவர்களைப் பார்க்கிறேன். ஆனால் செவிலியர்களைப் பார்க்கும்போது பௌர்ணமி இரவில் தேவதைகள் நடமாடுவது நினைவுக்கு வருகிறது. ஒரு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் அல்லது உறவினர்கள் யாரும் இல்லாதபோது, செவிலியர்கள் நோயாளிகளுக்கு ஆறுதல் மற்றும் நிவாரணம் வழங்குகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் உண்மையிலேயே தேவதைகளாகத் தோன்றுகிறார்கள்.”
சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளாக “தாய் – சேய் நல” வாட்ஸ்அப் குழு மூலம் தன் பகுதி கருவுற்ற தாய்மார்களுக்கு நலக்கல்வி மற்றும் விழிப்புணர்வை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறார்.
இதன் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும், பொதுமக்கள் பயன்பெறும் வண்ணமும் வழங்கி மக்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். இந்தக் குழுவின் மூலம் தன் பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் வாட்ஸ்அப் எண்களை சேகரித்து, தடுப்பூசி போடும் தேதி, நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை ஒழுங்குபடுத்தி கண்காணித்து வருகிறார்.
இவர் பணிபுரியும் சுகாதார நிலைய பகுதிகளில் பெண்களிடையே தனிநபர் சுத்தம், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக கருவுற்ற தாய்மார்களிடையே பேறுகால முன் பராமரிப்பு மற்றும் சுகப்பிரசவத்திற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அவர் ஆற்றிவரும் பணி பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை கவனித்துக்கொள்வதில் இந்த செவிலியர் எடுத்துக்கொள்ளும் தனிக்கவனத்தை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அவருடைய சிறப்பான பணிகள் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அவரது சேவையை மதித்து, அந்தப் பகுதி பொதுமக்கள் அவரை அன்புடன் “செவிலியர் அம்மா”, “சகோதரி”, “ஜெயா அக்கா” என அழைக்கின்றனர்.
சுகாதாரத்துடன் தொடர்புடைய பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்கள், ஊட்டச்சத்து தகவல்கள், இயல்பான பிரசவத்திற்கு உதவும் யோகா பயிற்சிகள், தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், RCHID அட்டையின் பயன்பாடு போன்றவற்றை தனது சொந்த வீடியோக்கள் மூலம் வெளியிட்டு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் அச்சத்தை போக்கி, அவர்களுக்கு நேர்மறையான எண்ணத்தை உருவாக்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.
இவர் ஆற்றிவரும் சேவைக்கு மகுடம் சூட்டும் வகையில் வழங்கப்பட்ட இந்த கௌரவிப்பு, சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவ மற்றும் செவிலியர் துறையினரின் அரிய பங்களிப்பை வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.







